Monday, October 4, 2010

நாரத ராமாயணத்தை முன்வைத்து “பாரத“ வரலாறும், படைப்பின் ஆழ்தளங்களும் (இறுதி பகுதி) - ஜமாலன்

பகுதி-1

பகுதி-2

பகுதி-3

5

இந்திய வரலாறு என்று நமக்கு கற்பிக்கப்பட்டுள்ள மேலைத்தேய அறிஞர்களின் கால-இட-தர்க்க வரலாற்றையும் - பாரத வரலாறு என்று நமக்கு சொல்லப்பட்டுள்ள பிராமணர்களின் புராணங்கள் அடிப்படையிலான வரலாற்றையும் - தமிழ் வரலாறு என்று கூறப்பட்டுள்ள குமரிக்கண்டம் தொடங்கிய தமிழர் வரலாற்றையும் ஒன்றோடு ஒன்றாக அடுக்கி ஒரு தொடர்பின்மையுயும்/குழப்பத்தையும் உருவாக்குகிறது பிரதி.  இக்குழப்பம் மூன்று வேறுபட்ட வரலாற்றின் வகைத்திணைகளை அதன் உள்ளார்ந்த தர்க்க அடிப்படையில் ஒன்றின்மேல் ஒன்றாக மேற்பொருத்தி விடுகிறது.

இதில் மூன்று ஆசிரியருக்கான மொழியமைப்பின் பின்னலை உருவாக்கி இருப்பதில் பு.பி்.யின் படைப்புத்திறன் மிளிர்வதை யாரும் மறுத்துவிட முடியாத.  இதன்மூலம் மூன்றுவித வரலாறுகளும், அதற்கான அரசியலும், சம்பவங்களும் பின்னிக் கொண்டிருப்பதை காணமுடிகிறது.  மூன்று குரல்களும் மூன்று காலமாக மாற்றப்பட்டிருப்பது, தமிழின் நவீன கதைசொல்லலியின் வருகையை சொல்வதாகிறது.  அதாவது, பழம்புராண நடையில் துவங்கி, பின் சாரமற்ற வரலாற்று நடையாக மாறி. இறுதியில் தற்கால அரசியலின் சம்பவக் கோர்வையாக மாறிவிடுகிற ஒருவகை பன்முகப்பட்ட எழுத்துமுறை இதன் வடிவ அமைப்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்திய ஆதிக்க வர்கக்த்தின் பார்வையிலான இந்திய வரலாறு, இந்தியாவை ஆண்ட காலனியவாதிகளின் பார்வையிலான இந்திய வரலாறு, தமிழ் போன்ற தனித்த தேசிய இனங்களின் பார்வையிலான இந்திய வரலாறு இவை மூன்றின் அடிப்படை தர்க்கமும் மையப்படுத்தப்பட்ட அரசியலைக் கொண்டவை.  இவை மக்களை விளிம்பு நிலையில் வைத்து பார்ப்பவை என்பதுடன், இவற்றின் வரலாற்றுவாதமும், வரலாற்றின் தலைமைப் பாத்திரம் பறறிய இவற்றின் போராட்டமும் அடிப்படையில் ஒன்றே என்பதை ஒரு நாட்டுப்புற வரலாற்றாளனின் பார்வையில் மறுஎழுதுதலுக்கு உட்படுத்துகிறது. அதனால்தான், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை ஒரு நாட்டுப்புறத்தானின் அபத்த நாடகமாக்க முயல்கிறது பிரதி.  இப்பிரதியில் உருவகப்படுத்தப்படும் பொருட்கள் எத்தனை எளிமையான நாட்டுப்புறத்தன்மை வாய்ந்தவையோ, அத்தைனை காத்திரமானவையும் கூட.

உதாரணமாக, இந்திய மூலதனத்தை பட்சணமாகவும் (இறுதியில் பொருளாதாரம் என்பது வயிற்றிற்கான உணவுதான். அது எத்தனை சிக்கலான தர்க்கங்களையும், கணிதவியல் சமன்பாடுகளையும் கொண்டதாக இருந்தாலும் கீன்ஸையும் மார்க்ஸையும் தெரியாதவருக்கும்கூட, ஒருவேளை உணவின் பயன்பாடு புரியும்.)  நவீன விஞ்ஞான தொடக்கத்தை கீழைத்தேயத்திற்கே உரிய பாணியில் பூதமாகவும் (பக்.953), மருந்துகள் இனிப்புத்தடவிய சூப்பிகளாகவும் (பக்.955) உருவகப்படுத்தப்படுகிறது.  தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளும் நாட்டுப்புறத்து மக்களின் பார்வையில் முன்வைக்கும் பிரதியின் நவீனத்தன்மை, கீழைத்தேயத்தின் படைப்பு புலம் புதமைப்பித்தனிடம் ஏற்படுத்தியிருந்த ஆழ்ந்த பாதிப்பை உணர்த்துவதாகிறது.

இதனை தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு புறம் உற்பத்தியை பெருக்குவதும், அதன் விளைவுகள் உருவாக்கும் பாதிப்புகளை காரணம் வைத்து, அவற்றை தீர்க்கவென மற்றொரு தொழில்நுட்பத்தை பரவவிடுவதுமான தொழில்நுட்பத்தின் விஷவலை - வளர்ச்சி என்ற பெயரில் விரிக்கப்பட்டதும், அதற்கு இம்மண்ணிலேயே ஒரு துதிபாடி வர்க்கத்தை, தனது கல்வி மூலம் கொண்டுவந்ததையும், அந்த வர்க்கம் மிகச் சீக்கிரத்தில் கற்றுத்தேர்ந்த விபிஷண குலம் என்பதையும், அக்குலம் இந்த தொழில்நுட்பத்தையும், அதை கொண்டு வந்த சமூகத்தையும் “ராம ராஜ்யம்“ என்பதாக வர்ணித்த வரலாற்றையும்கூட பிரதி தனது மொழிக்குள் கொண்டு வந்துள்ளது.

தேர்தலும், சட்டமன்றமும், அதன் உறுப்பினர்களும் (பக். 959) வர்ணிக்கப்படும் விதம் - அவர்களது பணி வெள்ளியம்பலத் தம்பிரான்களின் “காதுகளை அடைக்காதபடி, வெள்ளையூர் பட்சணங்களின் பெருமைகளைப் பாடி, தங்கள் சங்கீத ஞானத்தையும் சாரீர வளத்தையும் அபிவிருத்தி செய்து கொள்ளலாம்” என்பதாக வெள்ளையூர் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறது.  இதைவிட வலுவாக சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் பணிகளை வர்ணிக்க முடியுமா? இது இன்றுவரையிலான நடைமுறையாக இருப்பதை மறுத்துவிடமுடியுமா? இவவாறாக, சிறு பஞ்சாயத்து அமைப்புகள் ஊருக்கு ஊர் “மண்டபங்கள்” உருவாக்கப்பட்டு, அதிலும் இந்த அரசு துதிபாடல்கள் நடைபெறுவதை, அது இந்தியச் சூழலில் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலேயே இப்பிரதி வழியாக முன்வைக்கப்பட்டிருப்பதை காணமுடிகிறது.

இதிலும் விபீஷண யுக்தியை கடைபிடித்தவர்கள் இதனை சுவர்க்கமாக நினைத்து வழிபடுகிறார்கள்.  இங்கு பிரதி “விபீஷண யுக்தி” என்பதை அதன் வர்ணத் தன்மையிலிருந்து பிரித்தெடுத்துப் பொதுவான அரசியல் என்ற நிலைக்கு உயர்ந்திருப்பதை முன்வைத்து விடுகிறது. ஒரு “ஜனநாயகமாக“ சொல்லப்பட்ட சமூகத்திலும், மனுதர்மம் ஒரு அரசியல் ஆயதமாக மாற்றப்பட்டதுடன் ஆன இணை நிகழ்வாக இதனைக் கொள்ளலாம்.

ஒரு நாட்டுப்புறத்தானுக்கு வெள்ளை ஏகாதிபத்தியமும், உள்ளுர் செட்டிமாரும் ஒன்றுதான்.  இதையும்கூட பிரதி விட்டு வைக்கவில்லை.

6

இந்திய வரலாறு எழுதுதல் என்பது காலனிய காலத்திலேயே தொடங்கப்பட்டது.  குறிப்பாக உலக வரலாறு என்பதே 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புத்தான். அதன் ஓர் அங்கமாக காலனியவாதிகளால் எழுதுதலுககு உட்பட்ட இந்திய வரலாறு, பிறிதொரு வகையில் இந்திய தேச உருவாக்கத்திற்கான அடிப்படையாக இருந்தது. உலக வரைபடங்கள் உருவாக்கப்பட்டதற்கான காலனிய அரசியலுடனே இந்திய வரைபட உருவாக்கமும் நிகழ்கிறது. இதன் விளைவாக உலகின் முக்கிய அறிவுத்துறைகளான மானுடவியல், வரலாற்றியல், தொல்பொருளியல், அகழ்வாய்வு போன்றவற்றின் உருவாக்கமும், அறிவுத்துறை பரவாலாக்கமும் நிகழ்கிறது.  அதாவது, உலக நாடுகளினைக் கண்டுபிடிககும் “மகத்தான சேவை“யை முடித்துக்கொண்டு, கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளின் வரலாற்றை உருவாக்கும் “திருப்பணியை“ துவங்கின காலனிய அரசுகள். இதன் ஓரங்கமாகவே இந்திய நிலப்பகுதிகளை அகழும் பணி துவங்குகிறது.  இந்த அகழ்வாய்வுகளை ஒட்டி ஒரு இந்திய வரலாறு, நாகரீகம் (சிந்து) ஆகியவைப் பற்றிய சொல்லாடல்கள் உருவாகின்றன.  இவ்வாறாறக, இந்தியா பற்றிய பல வரலாற்று சாத்தியங்களுக்கான வாய்ப்புகள் திற்ந்து விடப்படகின்றன.

இவற்றினடிப்படையில், இந்திய வரலாற்றை நான்காக பிரித்தறியலாம்.  (1) மேற்கத்திய கார்ட்டீசிய தர்க்கவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாறு (2) பிராமணர்களால் உருவாக்கப்பட்ட அல்லது இதுவரை காத்துவரப்பட்ட தொன்மங்கள் அடிப்படையிலான வரலாறு (3) இந்தியாவில் உள்ள எண்ணற்ற சாதிகள் தங்களுக்கென்று உருவாக்கிக் கொண்டு காத்துவரும் வரலாறுகள் (4) இன்றும் வழிபாடாக, சடங்காக, சம்பிரதாயமாக இருந்துவரும் நாட்டுப்புற வரலாற்றுத் தொடர்கள்.  இவ்வரலாறுகளை பின்னி எழுத முயலும் ஒரு எழுத்து முறையாகவே இப்படைப்பு உருவாகிறது எனக்கூறலாம். இதன் விளைவே மேலே நாம் காட்டிய வரலாற்றுக் குழப்பங்களை உருவாக்கும் எழுத்துமுறை.

இந்திய காலனி நாடாக இருந்த 40-களில் நம் சமூகத்தில் பிரதானமாக இயங்கியது இரண்டு வரலாறுகளே.  ஒன்று காலனியவாதிகளால் உருவாக்கித் தரப்பட்டது.  பிறிதொன்று காந்தி, கோகலே போன்ற தேசியத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட தொன்மங்களின் அடிப்படையிலான மாற்று வரலாறு.  அதாவது இராமயணம், மகாபாரதம் போன்றவை. இவை இரண்டின் பிளவுகளிலும், பிணைவுகளிலும் சிக்கிக் கொண்டுவிட்ட இரண்டக மனம் கொண்ட மக்கள் கூட்டம். இந்தச் சூழலே புதுமைப்பித்தனின் படைப்பிற்கான அடிப்டைத்தளமாக அமைகிறது.  பிரதியில் மக்கள் கூட்டம் என்பர் எல்லா வரலாறுகளையும் போலவே மௌனிக்கப்படுகிறது. ஆனால், வீரர்களின்/தலைவர்களின் செயல்போக்கை அங்கீகரிக்கவும், நிராகரிக்கவுமான ஒரு செயலூக்கமற்ற கூட்டமாக மக்கள் பிரதியின் விளிம்புகளில் வந்து போகிறார்கள்.  இந்திய காலனீய எதிர்ப்பு போராட்டத்தின் அடிநாதமாக இருந்த காந்தி - இராமயணப் பிரதியின் மறு உருவாக்கமாக அல்லது இந்திய மக்களை மீட்டெடுக்க வந்த “இளைய பரதனாக“ புதுமைப்பித்தனின் படைப்புப் புலத்தில் தட்டுப்பட்டு, தளம் மாற்றம் செய்யப்படுவது யதேச்சையானது அல்ல.

இயல்பில், புதுமைப்பித்தன் காந்தியின் மீது மிகுந்த மரியாதை உடையவர்.  காந்தியின் மரணத்தை புனேயில் இருந்தபோது கேள்வியுற்ற அவர் - தனது துயரத்தை ஒரு கடிதத்தில் பகிர்ந்து கொள்கிறார் (6).  தனிமனிதன் என்ற வகையில் காந்தியின் மீது மதிப்பும், மரியாதையும் உடைய பு.பி. - அவரது “ஒத்துழையாமை இயக்கத்தை“ “டு“-விடும் போராட்டமாகவும், “சுதேசி இயக்கத்தை“ சொந்தமாக தோசை சுட்டு செய்யும் வணிகமாகவும், உண்ணாவிரதத்தை “வாயு பட்சணம்” என்கிற கொடிய தயபஸகாவும், சிறுவர்களின் விளயாட்டிற்கு இணையாக முன்வைப்பது - தனிமனிதனுக்கும்/ஒரு படைப்பாளியின் படைப்பு மனத்திற்கும் உள்ள முரண்பாட்டை விளக்குவதாகிறது.

படைப்பாளி என்ற வகையில் சமூக மனத்தின் உள் ஆழங்களைப் பார்த்தவர் புதுமைப்பித்தன், அதன் நாடித்துடிப்பைத் தனது படைப்பாற்றல் மூலம் உணர்ந்திருக்கிறார்.  இதற்கு புதுமைப்பித்தனின் பல கதைகளை சுட்டிக்காட்ட முடியும்.  இவரது “கட்டில் பேசுகிறது” - என்கிற சிறுகதை ரஷிய “போல்ஷெவிசம்” பற்றிய விமர்சனங்களை அன்றே முன்வைப்பதைக் காணலாம்.  புதுமைப்பித்தனின் யதார்த்தவாத தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பல கதைகளில் இத்தகைய படைப்பு மனத்தின் “பரபரக்கும்“ வெளிப்படல்களை பார்க்க முடியும். நமது சமூகத்தின் எதிர்காலம் பற்றிய சமூகத்தின் உள் தளத்தில் கனன்ற பல அறிகுறிகளை 30-40களில் பார்க்க முடியும்.  ஒரு படைப்பின் மிக முக்கியமான சமூக விளைவாக இதனைக் கருதலாம். இந்த வகையில் தனது கால சமூகத்தின் மனசாட்சியாக இருந்துள்ளது அவரது படைப்புக்ள என்றால் மிகையாகாது.

7

ஒரு படைப்பாளி சமூக அமைப்பை தனது மொழிக்குள் பதிவுறுத்தும் போது அல்லது மாற்றம் செய்யும்போது, சமூக அமைப்பிற்கும், மொழி அமைப்பிற்கும் இடையிலான முரண்பாடு படைப்பன் உள்தளத்தில் பதிவுறுத்தப்பட்டுவிடுகிறது.  அதாவது, சமூக அமைப்பானது, தனது உள் முரண்களாகக் கொண்டிருக்கும் எதிர்காலத்திற்கான சவால்கள், மாற்றத்திற்கான அல்லது அழிவிற்கான கூறுகள் - அன்றைய மொழியமைப்பின் போதாமையால் - நினைவு தளத்திலான மொழியாக மாற்றம் பெறாமல் - அதே சமயம் சிக்கலான மொழியின் வினைகளுடன் எச்சங்களாக பதிவுற்றுவிடுகிறது. இந்த எச்சங்கள் பின்னாளைய ஒரு வளர்ந்த சமூகத்தின் வாசிப்பாளனால் கண்டுணர்ந்து தனது கால நினைவு மொழிக்கு மாற்றம் செய்யப்படுகிறது.  இவ்வாறாக, ஒவ்வொரு சமூகமும் தனது சமூக வரலாற்றை எச்சங்களாக பதிவுறுத்துவதும், பிறகு வரும் பிறிதொரு சமூகம் அதனை வாசித்து வெளிப்படுத்துவதன் மூலம் தனது சமூக எச்சங்களை விட்டுச் செல்வதும் படைப்புத் தளத்தின் தொடர் நிகழ்வாகும்.. இந்த செயல்பாட்டுத் தளத்தை - உளவியலில் ஆழ்மனம் என்று கூறுவதுபோல்- - படைப்பியலில் “படைப்பின் ஆழ்தளம்” என்று கூறலாம். ஒரு படைப்பின் இந்த ஆழ்தளத்தை ஊடுறுவும், ஒரு வாசிப்பாளன், அதில் தொடர்பற்றதாகக் கிடக்கும் எச்சங்களை கண்டு படைப்பின் எண்ணற்ற அர்த்தசாத்தியப்பாடுகளைக் கண்டு பரவசமடைகிறான்.  இவ்வாறாக, ஒரு படைப்பு தன்கால மொழியில் பெயர்த்து எழுத தெரிந்தவனாக விமர்சகனையும், பேசத் தெரிந்தவனாக வாசகனையும் உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறது.

ஆக, வாசிப்ப என்கிற தொடர் நிகழ்வின் மூலமே, படைப்பின் அசைவியக்கம் என்பது நிகழ்கிறது. இந்த வாசிப்பே பிறிதொரு படைப்பாகவும் அமையலாம். இத்தகைய படைப்பின் தொடர் சங்கிலியாக, படைப்பு பிறிதொரு படைப்பை உருவாக்குகிறது.  இதனையே “பிரதியியல் பெருக்கம்”  என்று முன்பு கூறினோம்.  இத்தகைய ஒரு பெருக்க வினையை நிகழ்த்தும் படைப்பாக இராமாயணம் இருப்பதைக் கண்டு கொண்டிருப்பதிலும், அதன் வினையை நிகழ்த்த முனைவதிலும்தான் “நாரத ராமாயணம்” நம்மைக் கவர்வதாக இருக்கிறது.

தொகுத்துக் கூறினால்,

1. நாரத ராமாயணம் என்கிற பிரதியின், படைப்பின் ஆழ்தளம் - இந்திய சமூக அமைப்பிற்குள் சலனமுற்ற மதவாத அமைப்புகளினை ஒரு நோய்க்குறிபோல உணர்ந்த - அதை அன்றைய மொழிக்குள் ஒரு நாட்டுப்புறத்தானின் கதையாடலாக அங்கதச்சுவை நிரம்பிய அபத்த நாடக வடிவில் வெளிப்படுத்துகிறது.  இந்திய வரலாற்றிற்கும், பாரத வரலாற்றிற்கும் உள்ள அரசியல் அடிப்படைகளை சொல்கிறது. பெருமதம், பெருந்தேசம், பெருங்கலாச்சாரம் இவற்றின் அச்சாணியாக நின்று இந்திய தேசத்தை கட்டமைத்திருப்பதும், காத்து வருவதும் இராமயணமும் அதன் பரதன்  என்கிற கதையாடலுமே என்பதையும், இந்திய வரலாற்றில் இராமாயணம் என்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒன்றாக இருக்கும் என்பதையும் நுட்பமாக சொல்கிறது.

2. நவீன எழுத்தின் பிறப்பு என்பது, காலனிய காலத்தின் - மேலைத்தேய தர்க்க அறிவும், கீழைத்தேய தொன்மங்களின் உணர்வும் தொடும் ஒரு புள்ளியின் விளிம்பில் உருவாகிறது.

3. இனியும் வரலாறு என்பது தர்க்கத்தையோ/தொன்மத்தையோ கொண்ட பெருஞ்சொல்லாடல்களினால் ஆனதல்ல.  மாறாக அது ஒரு நாட்டுப்புற வடிவிலான சிறுசொல்லாடல்களினால் கட்டமைக்கப்படும் ஒருவகை மையமற்ற புனைவாகவே அமைய முடியும்.

4. ஒரு படைப்பின் சமூக விளைவு என்பது அதன் ஆழ்தளத்தில் சமூகத்தின் போக்கு பற்றிய எச்சங்களை புதைத்துக் கொண்டிருப்பதே தவிர, நாம் நம்பிவந்ததுபோல, நமக்கான அரசியலை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதோ, பிரச்சாரம் செய்வதோ அல்ல.

5.  ஒரு சமூக படைப்பாளியின் நேர்மையான மனசாட்சி, அல்லது அவனுக்குள் படைப்பாக வினைபடும் மொழியானது அவன் வாழும் சமூகத்தின் உள் முரண்களின் அடிப்படையில், எதிர்காலம் பற்றிய தொலைநோக்கிற்கான அறிகுறிகளை தனக்குள் கொண்டிருக்கும்.  தனிமனிதன் என்ற வகையில் அவனால் அறுதியிட்டு கூற முடியாமல் போனாலும், மொழிவழியாக அவை பதிவுற்றுவிடும்.

6. ஒரு படைப்பானது ஒவ்வொரு சமூகத்திலும் தனக்கான வாசகனையும் விமர்சகனையும் உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.  இவ்வாறு, உற்பத்தி செய்யும் “வாசகன்-பிரதி-விமர்சகன்“ இடையிலான ஒப்பந்தத்தின் வழியாக பிரதி தன்னை வேறு வேறு வடிவங்களில் பெருக்கிக்கொண்டே இருக்கும். இந்தப் பிரதியியல் பெருக்கத்தின் விளைவாக, அந்தந்தக் கால சமூக அமைப்புகளும், தேசங்களும் கட்டமைவதும், சிதைவதுமான இயங்கியல் நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும்.

7. இப்படியாக, இவ்வாறாக, இன்னபிறவாக... புதுமைப்பித்தன் பல்வேறு பிரதி ரூபங்களில் அறிவாக, உணர்வாக, அரசியலாக பெருகிக் கொண்டே இருப்பார் இன்றும், இனியும்....

(06-10-1997 - 05-01-1998)    

- ஜமாலன். காலக்குறி மார்ச் 1998.
-----------------
அடிக்குறிப்புகள்.

6. புதுமைப்பித்தன் வரலாறு - ரகுநாதன் (பக். 214)

0 comments: