3
ஒரு சிறந்த படைப்பாளி தனது படைப்பின் ஆழ்மன வீச்சில் தனது சமூகம் என்னவாக மாறப்போகிறது என்பதை உணர்ந்தறிந்து, தனத படைப்பின் சிக்கலான இயக்கத்தில், அதன் எதிர்காலம் பற்றிய அறிகுறிகளை சுவடுகளாக விட்டுச் செல்லமுடியும். இச்சுவடுகளாக இப்படைப்பில் அயொத்தியில் கட்டுவதும், இடிப்பதுமாக முன்வைக்கப்படும் ராமர்கோவில் பற்றிய சம்பவத்தைக் குறிப்பிடலாம். முதலில் ராமர்கோவில் அயொத்தியின் மத்தியில் விபீஷணர்களுக்காக அன்றைய அரசு கட்டுகிறது (பக். 935) அன்றே அந்த கோவிலுக்குள் குக வம்சத்தினர் (சூத்திரர்கள்) நுழைவது மறுக்கப்படுகிறது. இவ்வாலய பிரவேச மறுப்பு என்பது பின்னைய சரித்திரம் முழுவதும் வருகிறது. இதனை குக வம்சத்தினருக்கு விபீஷணப் புத்திரர்கள் அளித்த நரகம் என்பதாகச் சொல்லிச் செல்கிறது பிரதி.
பின்னாளில் படை எடுத்துவரும் முசலிவாகணன் என்கிற அந்நிய நாட்டு மன்னனின் வம்சத்தை சேர்ந்தவன் அக்கோவிலை இடித்து தனது மதக்கோவிலை கட்டுகிறான் (பக். 940). பிறகு பரதன் படையெடுத்து, அந்நியரை விரட்டுகிறான். அவன் பட்டத்திற்கு வந்தபின் மீண்டும் அங்கு ராமர் கோவில் கட்டப்படுகிறது. இந்நிகழ்வுகளை இன்றைய இந்துத்துவ எழுச்சியின் ஒரு குறியீடாக ராமர் கோவில் மாற்றப்பட்டிருப்பதின் அங்கமாக வைத்துப் பார்க்க முடியமெனில், தனது படைப்பாற்றலின் ஒளி வீச்சில் எதிர்காலம் பற்றி தனக்கான குறியீட்டு மொழியில் வெளிப்படுத்தும் தொல்குடி மாந்ரீகனைப்போல புதுமைப்பித்தன் செயல்பட்டிருப்பதை அறியலாம்.
4
இங்கு நம்மை இடரும் அடுத்த கேள்வி, ஒரு படைப்பாளி எப்படி எதிர்காலத்தினைப் பற்றிய சுவடுகளை விட்டுச் செல்லமுடியும்? அந்த வகைச் செயல்பாட்டிற்கான முறையியில் அல்லது “அறிவியல்” என்னவாக இருக்கும்? இந்தச் செயல்பாட்டிற்கான தேடலை இப்பிரதியை முன்வைத்து நிகழ்த்த முனைவோம்.
வரலாறு என்பது என்ன? என்பதற்கு புதுமைப்பித்தன் தனது கட்டுரை ஒன்றில் கூறுகிறார் “தென்னிந்திய வரலாற்றை இருவர் எழுதி உள்ளனர். ஒருவர் எழுதியது வரலாறு, மற்றவர் எழுதியது இலக்கியம்“ என்று. புதுமைப்பித்தனுக்கு வரலாறும் கூட இலக்கியமாக இருக்க வேண்டும். பிறிதொரு முன்னுரையில் எழுதுகிறார் - “நான் கதை எழுதுகிறவன். கதையிலே கல் உயிர் பெற்று மனிதத்தன்மை அடைந்துவிடும், மூட்டைப் பூச்சிகள்(4) அபேதவாதம் சொல்லும். அதற்கு நான் என்ன செய்யட்டும்? கதையுலகத்தின் நியதி அது. நீங்கள் கண்கூடாக காணும் உலகத்தில் மனிதன் “கல்லுப்பிள்ளையார்” மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா? மனிதன் கல் மாதிரி இருக்கும்போது கல்தான் சற்று மனிதன் மாதிரி இருந்து விட்டப் போகட்டுமே! தவிரவும் பழைய கதைகளை எடுத்துக்கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று கொண்டு பார்க்க எங்களுக்கு உரிமையுண்டு(5). ஆக, வரலாறு, இலக்கியம் என்பதெல்லாம் ஒருவகை கதை சொல்லல் என்பதுவும், எழுத்தின் புனைவு என்பது நமக்கே உரிய தொன்மத் தன்மையைக் கொண்டது என்பதுவும் அவரது பார்வையாக இருக்கிறது என்று கூறமுடியும்.
வரலாறு என்பது குறித்த இரண்டு வேறுபட்ட அடிப்படை பார்வைகள் இருக்கிறது. ஒன்று காலவரிசையைக் கொண்ட பகுத்தறிவிற்கு உட்பட்ட தர்க்கரீதியான வரலாறு (History by Reasons). இது மேற்கத்தியம் உருவாக்கிய வரலாறு பற்றிய கார்ட்டீசிய பார்வை. உலகில் வரலாறு என்று பொதுவாக சொல்லப்படுவது இப்பார்வை அடிப்படையில்தான். மற்றொன்று வரலாற்றை அதர்க்கமாக அணுகி தொன்மத் தன்மைக் கொண்ட கதையாடல்கள் மூலம் உருவாக்குவது (History by Myhts). இது நமது மரபான கீழைத்தேய பார்வையாகும். இந்த மரபான வரலாற்றைக் கூட இரண்டுவிதமாக கதைக்க இயலும். ஒன்று பேரினங்களை உருவாக்கும் நோக்கில் பல சிற்றினங்களை தொகுக்கும் வண்ணம், அவர்களது இன வரலாற்றுக் கதையாடல்களை, வழக்கங்களை, சடங்குகளை, பண்பாட்டை, மதத்தை ஒரு பெருங்கதையாடலுக்குள் கரைப்பது. இதற்கு உதாரணம் மகாபாரதத்தைக் கூறமுடியும் (6). மற்றொன்று வாய்வழிக் கதைகளாக, பழமொழிகளாக, சொலவடைகளாக, விடுகதைகளாக, சடங்காக, வழிபாடாக, திருவிழாவாக, காகலகாலமாய ஒரு இனம் தனது அகப்பரப்பிற்குள் காத்து வரும் நாட்டார் வழக்காற்றின் அடிப்படையில் இயங்கும் சிறகதையாடல்கள் உருவாக்கும் வரலாறு. இதற்கு “பிரகத் கதா“ முதல் சமீபத்திய நாட்டுப்புறக் கதைகள் வரை உதாரணம் கூறலாம்.
இவ்விரண்டு வரலாறுகள் தவிர்த்து ஒரு மூன்றாவது வரலாற்றிற்கான முயற்சியே புதுமைப்பித்தனின் நாரத ராமாயணம் என்று கூறலாம். அதாவது, வரலாறு - தர்க்கம், தொன்மம் இவற்றைத் தாண்டி புனைவு என்ற தளத்திற்கு நகர்த்தப்படுகிறது (History of Fiction). ஆக, வரலாறு என்பது ஒருவகை புனைவு என்பதே புதுமைப்பித்தன் என்கிற படைப்பாளியின் வரலாறு பற்றிய பார்வையாக இருக்கிறது எனலாம். இக்கண்ணோட்டம் கீழைத்தேய தொன்மமும், மேலைத்தேய தர்க்கமும் இணையும் ஒரு படைப்புத்தளத்தில் உருவாகுகிறது. இதுவே, இந்திய காலனிய காலத்து நவீன இலக்கிய உருவாக்கத்தின் அடிப்படையாகும். *
இப்படைப்பை, இந்திய வரலாற்றையும், இராமாயணத்தையும் அங்கதமாகக் கொண்டு எழுதப்பட்டதாக முதல் வாசிப்பிலேயே உணர முடியம். படைப்பின் ஒட்டு மொத்த அங்கதச்சுவை இந்த இரண்டு வரலாறுகளின் ஊடாட்டம் என்பது எத்தகைய அரசியல் அவலமமாக மாறப்போகிறது என்பதற்கான நாட்டுப்புற நகைச்சுவைக்கேயுரிய ஒரு வலி நிறைந்த மௌனத்தின்-விளைவு என்று கூறலாம். இதனை நாம் பேரளவில் இங்கு விளக்க வேண்டியதில்லை. உண்மையில், இந்த அங்கதத்தை மட்டுமே கொண்டிருந்தால் இப்பிரதியானது தனது படைப்பியல் நோக்கில் சாதாரண பிரச்சார இலக்கியமாக மாறி இருக்கும். ஆனால், பிரதி தன்னை வெளிப்படுத்திக் கொள்வது இந்த அங்கதத்தை மீறிய ஒரு படைப்புத் தளத்திலேயே.
(தொடரும்)
அடிக்குறிப்புகள்
4. புதுமைப்பித்தன் காஞ்சனை தொகுப்பிற்கான முன்னுரை பக்.3 - புதுமைப்பித்தன் படைப்புகள் சிறுகதைத் தொகுப்பு - ஐந்திணைப் பதிப்பகம் (1987).
5. ஐராவதி கார்வேயின் - யுகாந்தா. மகாபாரதத்தில் பல சிற்றினங்கள் தொகுக்கப்பட்ட வரலாற்றை மகாபாரதத்தினூடாக ஆய்வுசெய்யும் ஒரு மானுடவியல் நூல். மேலும் விளக்கம்பெற டி.டி. கொசாம்பியின் - “பண்டைய இந்தியா“ - பக்கம் - 168.
* – இந்த காலனிய காலத்து நவீன இலக்கிய உருவாக்கம் புதுமைப்பித்தனில் அமைவுருவதை அவரது “சிற்பியின் நரகம்“ கதையில் விளக்கியுள்ளேன். அது இப்பதிவு முடிந்துதான் அதை தட்டச்ச வேண்டும்.
- காலக்குறி மார்ச் 1998.




0 comments:
Post a Comment