2
புதுமைப்பித்தனால் நாற்பதுகளில் எழுதப்பட்ட இந்த புனைகதை குறித்து இதுவரையில், நமக்கு தெரிந்த அளவில், எந்தவித எதிர்வுகளும் இல்லாதது, கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இன்று நவீன எழுத்து முறையில் அழிததெழுதப்பட்ட வரலாறு பற்றி பேசுகிறோம். ஆனால், புதுமைப்பித்தன் ஒரு தொன்மக் கதையை அழித்தெழுதுகிறார். வரலாற்றை அழித்து அதனை தொன்மமாக மாற்றும் எழுத்துமுறைக்கு பதிலாக, தொன்மத்தை அழித்து அதனை வரலாற்றாக மாற்றுகிறது இப்பிரதி. வரலாற்றை அழித்தெழுதலில் - “வரலாறு“ என்கிற ஒன்று இருப்பதற்கான சாத்தியம் இருப்பதால், பிரதியானது அதையும் மறுத்துவிட்டு நேரடியாக தொன்மத்தை அழித்தெழுத முனைகிறது. அப்படியெனில், நவீன வரலாறு என்பது என்ன? அதற்கு பிரதி தரும் பதில் சமூகத்தின் ஆதிக்க மையம் அழித்தெழுதிக் கொண்டிருக்கும் நவீன தொன்மமே. இவ்வாறாக, இந்திய வரலாற்றையே “பரதன்“-என்கிற தொன்மத்தின் பிரதியியல் பெருக்கமாக அனுமானிக்கும் இப்பார்வை சில முக்கிய அரசியல் மற்றும் வரலாற்று உண்மைகளைச் சுட்டுவதாக அமைந்துள்ளது.
இங்கு எழும் கேள்வி ஏன் புதுமைப்பித்தன் இராமாயணத்தை தனது படைப்பிற்கான அல்லது தனது பார்வைக்கான ஒரு பரப்பாக எடுத்துக் கொண்டார் என்பதுதான். பொதுவாக ஒரு பழங்கதையை எடுத்துக் கொண்டு அதனை தற்கால சமூக அமைப்பிற்கு ஏற்ப, மறு உருவாக்கம் செய்தல் அல்லது அம்மூலத்தை போலவே பிரிதொன்றை உருவாக்குதல் அல்லது தனது நோக்கத்திற்கு ஏற்ப மூலக்கதையின் வடிவத்தை எடுத்துக் கொண்டு உள்ளடக்கமாக தனது கருத்துக்களை வைத்தால் என்பதெல்லாம் தமிழில் புதிதல்ல, புதுமைப்பித்தனின் காலத்திலும்கூட. பொதுவாக இந்திய தேசிய எழுச்சியின் ஓர் அங்கமாக இத்தகைய வடிவங்கள் கதையாக, நாடகமாக பல வடிவங்களில் வெளிப்பட்டிருப்பதை காண முடிகிறது. நமக்கு எழும் பிரச்சனை எல்லாம், சமகால அரசியலில் மற்றும் இந்திய வரலாற்றினை உள்ளடக்கிய ஒரு புனைவிற்கு இராமாயணத்தை தேந்த்தெடுத்தது ஏன்?
இதனை புதுமைப்பித்தனின் வரலாற்றின் ஊடாக பயணப்பட்டு காண்பது சாத்தியமற்றது. நமக்கு கிடைத்திருக்கும் அவரது வரலாறு பற்றிய தகவல்கள் மிகவும் குறைவு. எந்த குறிப்புகளிலும், நமக்கு தெரிந்தவரை, இப்படைப்பு பற்றிய செய்திகள் எதுவும் இல்லை. இதன் காலம்கூட 40 மற்றும் 45க்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என பழைய தமிழ் புத்தகாலயம் வெளியிட்டுள்ள இப்படைப்பின் தனிப் பிரசுரத்திலிருந்து அறிய முடிகிறது. இப்படைப்பினூடாக அமைந்திருக்கும் காந்தியின் சிறை உண்ணாவிரதம், இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றைக் கொண்டு இது 40-களில் எழுதப்பட்டது என்று யூகிக்க முடியும்.
நமது கேள்விக்கான பதிலை இப்படைப்பினூடாக காண முயலலாம்....
1. இராமாயணம் மற்றும் மகாபாரதக் காப்பியங்களின் அடிப்படையில் மனு உள்ளிட்ட தர்ம சாஸ்திரக்காரர்கள், நால்வர்ண தர்மங்களை எண்ணற்ற படிப்பறிவற்ற நாட்டுப்புற மக்களுக்கு போதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கதையாடல்கள் என்பதே அதன் அரசியல் உள்ளடக்கம் என்கிற சட்டோபாத்யாவின் கருத்து(2), இப்பிரதி இந்திய சமூகத்தின் அடிப்படை தர்மக் கோட்பாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக இருப்பதிலிருந்து இம் முடிவிற்கு வரலாம். இதற்கு பிரதியின் இரண்டு பகுதிகளிலும் பல நிகழ்வுகளை கொண்டிருக்கின்றன.
இராமனின் பேரன்கள் நால்வரையும், அடிப்படையாகக் கொண்டு நான்கு வர்ணங்களின் உருவாக்கம் பற்றி பேசுகிறது. “புருஷ ஷீக்தத்தின்“ அடிப்படையான பிரம்மம் என்கிற தொன்மத்திற்கு இணையாக லவனின் நான்கு பிள்ளைகள் நான்கு வர்ணங்களாக உருவாகுகிறார்கள். (8-வது வளர்ச்சி சருக்கம்) குகன்-சூத்திரனாகவும், விபீஷணன்-பிராமணராகவும், சுக்ரீவன் - வைசியனாகவும், பரதன்-சத்திரியனாகவும் என நான்கு வசதியான தொழில் பிரிவினைகளை தேர்ந்து வளர்கிறார்கள். இதில் விபீஷணர்கள் பின்னால் இந்திய ஆதிக்கத்தின் (அயோத்தி மாநகரம் - இந்திய நிலப்பரப்பாக உருவகப்படுத்தப்படுகிறது) தலைமைப் பொறுப்பிற்கு வருவது வரையிலான அவர்களது வளர்ச்சி நுட்பமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நான்கு குறியீட்டுப் பெயர்களின் பின்னால் ஒரு குறிப்பிட்ட மனப்போக்கு முன்வைக்கப்படுகிறது. குகன் என்கிற கூட்டம் அடிமைகளாக்கப்படவதும், சுக்ரீவர்கள் ஆடம்பரமோகம் மற்றும் மதுவிற்குள் கரைகிறார்கள். விபிஷணர்கள் ஆரம்பம் முதல் பூசைகளின் மூலம் இராமனின் பாராயண வாரிசுகளாக மாறி பின்னாளில் ஆதிக்க வகுப்பாக மாறுகிறார்கள். இந்த தன்மையை - இராமயணத்தில் வரும் விபீஷணன், ஆட்சி அதிகாரத்திற்காக, தனது சகோதரனிற்கு எதிராய் இராமனுடன் கூட்டு சேருவதை - விபீஷண யுக்தி (அர்த்த சாஸ்திரத்தை “விபிஷண யுக்தி” - என்கிற தர்க்க நூலாக அறிவி்க்கிறது இப்படைப்பு) என்றும் எதிர்த்து போரிடுதல் இராவண புத்தி என்றும் சுட்டப்படுகிறது. இந்த விபீஷண மனப்போக்கு பிற்கால காரியவாதமாக மாற்றமடைவதையும்கூட பிரதி முன்வைத்து விடுகிறது.
2. இராமயணம் இந்துப் பெருமதத்திற்கான ஆன்மபலமாக இருந்து வந்திருக்கிறது. அதனாலேயே பிரதி அவதாரங்களாக கூறப்பட்ட இராமயணப் பாத்திரங்களை மனிதர்களின் நிலைக்குள் வைத்து தொன்ம-நீக்கம் செய்கிறது. மனிதர்கள் என்கிற நிலையில் அவர்களது உடல் உபாதைகளை சுட்டிக்காட்டுவதால் இராமாயணம் என்ற தெய்வீகப்பிரதியின் பாத்திரங்களின் ஆன்ம பலத்தை விமர்சிக்க முயல்வது ஒரு காரணமாக இருக்கலாம்.
சீதை குளிரில் நடுங்குகிறார், ராமர் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார், லவன் கடுமையான காசநோயாளியாக இறுமிக் கொண்டிருக்கிறான், அனுமார் பல்விழுந்து, மேலே பேன்குத்திக்கொண்டு அல்லாடுகிறார், ராமன் குழந்தையை தூக்ககூட திறனற்றவனாக இருக்கிறான். சீதை வயது முதிர்ந்த கூனியாக காட்சி அளிக்கிறாள் ராமனுக்கு. அரக்கர் வதம் என்பதுவே இராமனின் கர்மப்பலன் என்பதை கிண்டலடிக்கும் பகுதிகள் (5-ஆம் பகுதி வனம்புகு சர்க்கம்) இராமகதையின் மிக அடிப்படையான தர்க்கத்தினை அபத்த நிலைக்கு உயர்த்திவிடுகிறது. இராமன் தனது “சிங்காதனம்“ இடிக்கும் சாரமற்ற வாழ்விற்கு அர்த்தம் தேடி,அரக்கர் வதத்திற்காக இமயமலையில் அலைதல். அது நிறைவேறாத நிலையில் தற்கொலைக்கு முயல்தல். அதிலும் தோல்வி அடைந்து, சீதையை நாடிவருதல். இராமனின மனநிலையில் புரிந்துகொள்கிறாள் சீதை. அப்பகுதி இப்படி முடிகிறது ”அன்று இரவு குகையில் இருவர் தூங்கவில்லை” (பக். 919), இநநிகழ்வின் உள்ளார்ந்த தளத்தின் மனம் மற்றும் உடல் வாதைகளை வாசகனின் அர்த்தத்திற்கு விட்டுவிடுகிறது படைப்பு.
3. கதைகளின் மறு உருவாக்க அரசியலில், இராமயணம் பல்வேறு விதமாக பல சமூகங்களிலும் வாசிக்கப்பட்டிருக்கிறது. அதனால், தற்கால சமூக வாசிப்பிற்கான பிரதியாக இராமாயணம் எடுக்கப்பட்டு அதனை தலைகீழாக்கி வாசிப்பதன் மூலம் ஒரு எதிர்-பிரதியை உருவாக்க வேண்டிய அவசியம் காரணமாக இருக்கலாம்.
பிற்காலத்தில் இராமன் வாழ்வது தன்னைப் பற்றிய கதைகளின் மூலமே என்பதை இராம-அனுமான் பாராயணம் மூலம் உணர்த்த முயல்கிறது. இப்பாராயணம் நெஞ்சை உயலர்த்திவிடும் (பக்.923) என்பதாக, இது புண்ணியம் என்பதற்கு எதிராக உலர்ந்த மனநிலையை உருவாக்குவதாக தனது அரசியலை முன்வைக்கிறது பிரதி. இராமகதை, இராமன் மற்றும் அனுமாரின் நினைவுகளின் அடிப்படையி்ல் பலவிதமாக மாற்றி மாற்றிச் சொல்லப்படுகிறது. இராமயணமே, பலவிதமான கதைகளாக இருப்பதை இதனுடன் சேர்த்துப் பார்க்க முடியும். உதாரணமாக புத்த ஜாதகக் கதைகளில் இராமனின் தங்கையாக சீதை கூறப்படுகிறாள் (3). இலங்கேஸ்வரன் என்கிற தமிழ் நாடகம் ஒன்றில் சீதை இராவணனின் மகளாக வருகிறார்.
4. இந்துப் பெருமதத்தின் கடவுளாகவும், அவதாரமாகவும், அதேசமயம் “இந்து ராஜ்யம்” என்கிற கற்பிதத்தின் பெரும் மன்னனாகவும் இராமன் இருப்பதால், வரலாறு மற்றும் கடவுளின் ஒருங்கிணைவை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் பிரதி என்பதும் காரணமாக இருக்கலாம். இதனை இராமனின் கடவுள் தன்மையை பிரதி நாட்டுப்புற நகைச்சுவைக்கு உட்படுத்துவதை கொண்டு அறியலாம்.
விஷ்ணு ராம அவதாரமாக போய்விட்டதால் பாற்கடல் பாசிபிடித்து விட்டதாகவும், சேஷசயனத்தில் காளான்கள் முளைவிட்டு விட்டதாகவும், “அங்கு வந்து தூங்குவதற்கு திருவுளம் எப்படியோ“ என தேவேந்திரன் தனது ஆயிரம் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர்வடித்து அழைப்பதாக “உத்திர ராமச் சருக்கத்தி்ல் (பக்.929) கூறப்படுகிறது.
5. இறுதியாக, புதுமைப்பித்தன் இந்திய வரலாற்றையும் அதன் தொன்மக் கட்டமைப்புகளையும் தனது படைப்பியல் நோக்கில் அணுகும் முயற்சியாக, இதனை பார்க்க முடியும். முழுமையாக படைப்புத் தளத்தில் மட்டுமே இயங்கிய அவர், தனது படைப்பியல் நோக்கில் இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை தொன்மமாக இயங்குவதும், இயங்கப்போவதும் இராமயணமும், பரதனும் என்பதை தொலைநோக்காக தனது படைப்பின் நுண்திறனால் கண்டு கொண்டிருக்கிறார் எனலாம். பிரதியில் எதிர்கொள்ளும் இம்முக்கியமான தளம் படைப்பு பற்றிய பல புதிய அடிப்படைகளை தருவதால் அதனை கொஞ்சம் விரிவாக பார்க்க வேண்டியுள்ளது.
(தொடரும்)
அடிக்குறிப்புகள்
2. இராமாயாணம் மற்றும் மகாபாரதம் இரண்டும் வேதங்களிலும், உபநிஷத்துகளிலும், பிரமாணங்களிலும் கூறப்பட்ட தர்மங்களை படிப்பறிவற்ற நாட்டுப்புற மக்களுக்கு உபதேசிக்கும் நோக்கத்தில் கதையாடல்களாக உருவாக்கப்பட்ட தர்ம நூல்களாகும் என்றும் சாஸ்திரக்காரர்களின் அரசியல் நோக்கத்தை பரவலாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கதையாடல்கள் என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்யாய. (பார்க்க -“இந்திய தத்துவ ஞானத்தில் மறைந்திருப்பவையும், நிலைத்திருப்பவையும்” மொழிபெயர்ப்பு - கரிச்சான்குஞ்சு - பக்கம்:249)
3. Page -47-48 - History of the Tamils - P.T. Srinivasa Iyengar - Asian Educational Services - 1995. இராமனும், கிருஷ்ணனும் விஷ்னுவின் அவதாரம் என்பதாக பிற்காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் வேதங்களில் ஒரு ராமன் வருகிறான். அவன் பெரிய அளவில் புரோகிதர்களுக்கு தட்சிணை வழங்கியவன் என்பதாக மட்டுமே குறிப்பிடப்படுகிறது. விஷ்னுவைப் பற்றிய பிற்கால எழுச்சிகள் இராமனையும், கிருஷ்ணனையும் அவதாரங்களாக உருவமைத்தன என்றும், பிற்கால பக்தி இயக்க அலைகள் இக்கதையாடல்களின் பரவலாக்கத்திற்கு காரணமாக அமைந்தன என்றும் அய்யங்கார் அவர்கள் குறிப்பிடுகிறார்.
- காலக்குறி மார்ச் 1998.




0 comments:
Post a Comment