வாசிப்புச் செயல்பாட்டின் தீவிரத்துக்காகத் தேர்வு செய்த எழுத்துக்களின் தொகுப்பு
உங்களுடன்... 'இந்தியச் சந்தையைப் பிடித்து விட வேண்டும் என்ற அமெரிக்காவின் முயற்சி கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பித்து இருபத்தோராம் நூற்றாண்டில் நிறைவேறிவிட்டது. கிளிண்டனின் வருகை இதை உறுதி செய்துவிட்டது' என்று தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டு வெளிவந்துவிட்டது, காலக்குறி மே - ஜீலை 2000 இதழ்.
நேர்த்திமிக்க அச்சமைப்பில் நவீன ஓவிய பிரக்ஞையில் அட்டைப்படம் வெகு ஈர்ப்புடன் ஆர்வம் ஏற்படுத்தும் விதத்தில் 'காலக்குறி' அமைந்துள்ளது.
சுமார் 114 பக்கங்களில் வாசிப்புச் செயல்பாட்டின் தீவிரத்துக்காகத் தேர்வு செய்த எழுத்துக்களின் தொகுப்பு 'காலக்குறி'.
'மனக்கோட்டையின் அலைவுறும் மனித உடல்கள்' எனும் தலைப்பில் ஜமாலன், நவீன தமிழ்ச் சிறுகதையில் மெளனி பதித்த தடங்களின் புனைவு வெளியின் வாசிப்புச் சாத்தியங்களை, வாசிப்பின் அரசியலை முன் வைத்துச் செல்கின்றார். நமது வாசிப்பின் மீதான ஓர் மறு வாசிப்பைக் குறுக்கீடாக நிகழ்த்தி விடுகின்றார்.
- சி. சிவசேகரம் லத்தீன் அமெரிக்க இலக்கிய, நிக்காரகுவாவின் போராளி விவசாயக் கவிஞர்களின் கவிதைகள் மூலம், தமிழ்ச் சூழலின் படைப்புத் தளத்தில் ஓர் எதிர் வினையை நிகழ்த்துகின்றார். தமிழ்க்கவிதையின் இயங்குதளம் எதனை நோக்கிச் செல்கிறது என்பதனை நமக்கு உணர்த்திச் செல்லும் பண்பாட்டுப் பரிவர்த்தனையையும் நிகழ்த்தியுள்ளார்.
- கமலின் ' ஹே! ராம்' இந்திய, தமிழக சமூக வெளிக்குள் நிகழ்த்தும் முரண்கள், கருத்தியல்கள் குறித்த சில கேள்விகளை எழுப்பிச் செல்கிறது.
- மார்க்சிய விமரிசகர் என அறியப்பட்ட கோ. கேசவன் 'பின் நவீனத்துவத்தின் தத்துவமும் அரசியலும்' எனும் தலைப்பில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி பிரதி வடிவில் அமைந்துள்ளது.
கேசவனின் தத்துவ உரையாடல் பின்புலத்தில் 'பின் நவீனத்துவம்' குறித்த அவரது வாசிப்பும் புரிதலும் இடம் பெற்றுள்ளது.
இவற்றினூடே 'கேசவன் போன்ற' தோழர்கள் பின் நவீனத்துவம் போன்ற சிந்தனைகளை எதிர்கொள்ளும் நிலைமைக்கு ஓர் மாதிரித் தன்மை யாவும் இந்த உரையில் இருக்கிறது.
- 31-வது உலகத் திரைப்பட விழா குறித்த குறிப்புகள், முதல் தமிழ் ஆவணத் திரைப்பட விழா குறித்த நிகழ்வுப் பதிவுகள், இயக்குநர் அருண்மொழியின், 'சில பணிகளும் சில கேள்விகளும்', 'சினிமா' குறித்த அக்கறையையும், அவை சார்ந்த உரையாடலையும் எதிர்பார்த்ததன் நிமித்தம் இடம் பெற்ற பகுதிகள் எனலாம். கவிஞர் அபியுடன் ஒரு நேர்காணல். இவை கவிதை, தமிழ்க்கவிதை, தமிழில் கவிதை என்ற அபியின் பார்வையினூடே வெளிப்படும் சிதறல்கள்.
முருக பூபதியின் 'வனத்தாதி' நாடக நிகழ்வின் பதிகை நிகழ்வுப் பதிவு - 2 ஆக இடம் பெற்றுள்ளது. அடுத்து 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' நாவல் விமரிசனக் கூட்டத்தின் நிகழ்வுப் பதிவு - 3 ஆக இடம் பெற்றுள்ளது.
- கென்ய அறிஞர் கூகி வா கியாங்கோவின், 'ஆப்பிரிக்க இயக்கத்தின் மொழி' என்ற பரப்பில் கூகியின் சிந்தனை பதிவு செய்யப்பட்டுள்ளது. காலனிய ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளில் மொழியின் இடம் எத்தகையது என்பது தனித்த வரலாற்றுப் போராட்டம் கொண்டது. மொழி பண்பாடாக எவ்வாறு உள்ளது என்பதைக் கூகி சொல்கிறார். தமிழிலும் பண்பாடாக மொழி உள்ளதை நாம் காணலாம். மொழி வழித் தேசியம் இந்த நூற்றாண்டில் வளர்ந்து மறு நோக்கில் இன வரைவியல் சார்ந்த எழுத்து முறைக்கு, புதிய மொழிச் சிந்தனைக்கு எவ்வாறெல்லாம் ஆட்பட்டு வருகின்றோம் என்பதெல்லாம் நமக்கு நிதர்சனம்.
இதனை விரிவாகப் புரிந்து கொள்ளும் பாங்கில் கூகியின் சிந்தனை அமைந்துள்ளது. தமிழ் பயிற்று மொழி வேண்டி போராடும் நேரத்தில் இது போன்ற கட்டுரைகளின் வருகை தமிழ்ச் சிந்தனைக்குப் புது வளம் தரட்டும். வழக்கம் போல் புத்தக விமரிசனங்கள். ஆக 'காலக்குறி' நாம் வாழும் கால வெளியைக் கடக்க முற்படுவதற்கான அல்லது நாம் வாழும் காலத்தைக் குறி வைத்து உணர்த்திச் செல்லும் விதத்திலான இதழ்.
மூன்றாம் உலகைச் சார்ந்த சிந்தனைகளின் படைப்பு, உத்வேகங்களின் படைப்பு, உத்வேகங்களின் பெறுமானங்கள் ஆகியவை தமிழில் ஊடாடி வர சாத்தியங்களைத் திறந்துவிடும் இதழ் காலக்குறி.
காலக் கிரமமாகக் 'காலக்குறி' வருகை தர வேண்டும். தமிழுக்குப் புது வளங்கள் கொண்டு சேர்க்க வேண்டும்.
- ஆதி
குறிப்பு: இவ்விமர்சனம் ஆறாம்திணை என்கிற இணையதளத்திலிருந்து மீள்பதிவு செய்யப்படுகிறது. காலக்குறி பற்றிய பல பார்வைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இது இங்கு பதியப்படுகிறது. நன்றி ஆறாம்திணை மற்றும் எழுதிய ஆதி அவர்களுக்கு.




1 comments:
இன்ன பிற வழியாக நுழைகிறேன்...புத்தக வாசிப்பில்லாதவன் நான்...மலை கண்ட எறும்பாய் மலைத்துப் போய் காலக் குறியை படித்துக்கொண்டிருக்கிறேன்...தொடர்ந்தும் வாசிக்கிறேன்...புது வகை எழுத்தறிமுகத்துக்கு நன்றிகள்...
Post a Comment