அமுக்கப்பட்டும் ஒடக்கப்பட்டும் கிடக்கும் மூன்றாம் உலகின் கலைஇலக்கியக்குரலுடன் வெளிவருகிறது காலக்குறி. இன்றைய உலகின் புவிசார் அரசியல் (Global Politics) என்பது, ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலக நாடுகளின் எண்ணை வளங்கள், இயற்கை வளங்கள் மற்றும் மனித வள ஆற்றலை சுரண்டி தங்கள் சமூகங்களின் நெருக்கடிகளை தீர்த்து சுகபோகமான வாழ்வை நடத்த போர்களையும், வன்முறையையும் நம் மண்ணின் மீது நிகழ்த்துவதாக உள்ளது. நமது வளங்களை கொள்ளையிட்டு, மேலும், மேலும் தங்களை பலம் பொருந்தியதாக மாற்றிக் கொள்ளவும், உலக அளவில் பதற்ற நிலையை உருவாக்கி அதில் குளிர் காயவும் மத அடிப்படைவாதம், இனவாதம், பயங்கரவாதம் என்ற பெயரால் ஒரு மனித அழிப்பு விளையாட்டை மூன்றாம் உலக மக்களாகிய நம் மீது நடத்தி வருகின்றன.
நமது மக்கள் கூட்டம் கூட்டமாக அகதிகளாக்கப்பட்டு சொந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்டு எல்லைகளில் நிற்கும் வண்ண வண்ண காட்சிகளாக டி.வி. சானல்களில் பார்க்கப்படவேண்டிய கஹிலின்(1) கார்ட்டூன் காட்டும் "Poor Creatures" -களைப்போல கேலிச்சித்திரங்களாக இருத்தப்பட்டுள்ளார்கள். இந்த அழிவுகள் காலனீய நாடுகளைச் சுரண்டி மூலதனத்தை குவித்துக்கொண்டு, மேற்கத்திய நாடுகள் தங்களை உலக முதலாளிகளாக - ஏகாதிபத்தியங்களாக உருவாக்கிக்கொண்ட காலத்தில் துவங்கி... இன்று உலக வளர்ச்சிக்கான தியாகமாக உருவமைக்கப்பட்டு நிகழ்த்தப்படும் ஒரு அவல நாடகமாகும். மூன்றாம் உலக மனிதர்கள் உள்ளூர் அதிகார வர்க்கங்களால் கூட்டம் கூட்டமாக வெளியேற்றப்பட்டு, நகரங்களிலும், கிராமங்களிலும் அழிக்கப்படுவதும் - வறுமையின் கோரப்பிடியில் பட்டினிச்சாவுகளாக கிராமம் கிராமமாக மறைந்தொழிவதுமாக உச்ச நிலையில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இதற்கு மனித அழிவை தங்களது மையமாகவும், இறுதி தீர்ப்பாகவும் வைத்துள்ள மதங்கள், ஒருவித நியாயப்பாட்டை வழங்கி வருகின்றன. தங்களது அறவியல் மூலம் மனித அழிவிற்கான காரணங்களை தனிமனித பாவ-புண்ணியங்களுடன் இணைத்து, ஒவ்வொரு தனிமனிதனிடமும் குற்றமற்ற உணர்வுகளை உருவாக்கி உள்ளன.
இந்த கருமேகம் சூழ்ந்த அரசியல்-மத ஆடகளத்தில் - இலக்கியம், வாழ்க்கை, தத்தவம், அரசியல் எல்லாம் தங்களது தடைச்சுவர்களை உடைத்து ஒன்று கலந்து பீறிட்ட நிலையில், அனைத்துவகை இழிவுகள், ஒடுக்குமுறைகள், வன்முறைகள், நாகரீகம் என்ற பெயரில் நிகழும் கலாச்சார அழிப்புகள் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு புதிய உணர்ச்சிமிக்க, உத்வேகம் கொண்ட மொழியாக மூன்றாம் உலக கலை-இலக்கியம் ஆதிக்கச் சக்திகளை எதிர்கொள்ளத் துவங்கியுள்ளன. அடையாளம் மறுக்கப்பட்டவன் தன் அடையாளத்தை சத்தமிட்டு கூவுகிறான் கவிதையாக, கதையாக... ஒடுக்குமுறைக்கு எதிரான கலகமாக மாற்றுகிறான் எழுத்தை. இங்கு இலக்கியம் ஆயுதமாக மட்டுமின்றி வாழ்க்கையாகவும் பரிணமிக்கிறது. ஈகோ கூறியதுபோல புனைவுகளினை உருவாக்க அமைந்ததைப் போலவே அமைந்திருக்கிறது வாழ்க்கை.
சிதறிக்கொண்டிருக்கும் மூன்றாம் உலக கீழைத்தேய நாடுகளுக்கும், ஒருங்கிணைந்து கொண்டிருக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் சிக்கியிருக்கும் இன்றைய மனித நிலையை, அதன் அவலத்தை, எழுச்சியை பாடபொருளாக கொண்டிருக்கும் இவ்விலக்கியம் தனது சுயத்தை நோக்கியதாகவும், அதேசமயம் மறுக்கப்பட்ட வளர்ச்சியை உள்ளடக்கி மேலெழும்புவதாகவும் உள'ளது. இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய இலக்கியவாதிகள் அனைவரும் மூன்றாம் உலகைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விலக்கியங்களின் கலையியல் வடிவங்களை, முயற்சிகளை அங்கீகரித்துவிட்டு, அவற்றின் அரசியல் உள்ளடக்கங்களை புறக்கணிக்கவும், மறுக்கடிக்கவும் முயலும் மேற்கத்திய போக்கிற்கு இவை ஆளானபோதிலும், இன்று நவீன சிந்தனையாக சொல்லப்பட்டவற்றுடன் இவ்விலக்கியங்கள் இணைபோக்கை கொண்டிருப்பதன் மூலம் தவிர்க்கவியலாத அங்கீகரிப்பைப் பெற்றுள்ளன.
அங்கீகாரம் தேடுவது அடிமையின் வேலை - என்பதை உணர்ந்து, எல்லாவித அங்கீகரிக்கப்புகளையும் மறுக்கும் அடிப்படையைக் கொண்டவை இவைகள். நிறுவனமயமாதலுக்கு வெளியே தங்களது இயக்கத்தை வலுவுடன் நிகழ்த்தி வருகின்றன. எகாதிபத்தியம் உருவாக்கும் நாகரீகம் பற்றிய நினைவுகள், வளர்ச்சி பற்றிய கனவுகள், உலக வரலாறு, சுய வரலாற்றுக் கதையாடலை மறந்து போதல் என்கிற போதையிலிருந்து விடுபட்டு, நினைவுகளும், அதன் அடிப்படையிலான கனவுகளுமான ஒரு மொழிநடையில் இவ்விலக்கியங்கள் அழிக்கப்பட்ட நினைவுகளைத் தேடிய பயணமாக நகர்கின்றன.
எந்தவொன்றும் ஒரு கால - வெளிக்குள்ளேயே இருத்தலடைகிறது. அல்லது அர்த்தமுள்ளதாகிறது. காலம் என்பது மேற்கத்தியத்தைப்போல வளர்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதான நேர்க்கோட்டுத்தன்மை கொண்டதல்ல. ஒரு கீழைத்தேயனுக்கு காலம் என்பது வளர்ச்சி, வீழ்ச்சி, மந்தம் என்பதாக திருகிச்செல்லும் சுழற்தன்மை (Spiraling) வாய்ந்ததாக இருக்கிறது. நாளை மீண்டும் ஒரு நேற்றாக மாறுவதும், இன்று மீண்டும் ஒரு நாளையாக வருவதுமான சுழற்சி என்பதே நமது காலமாக உள்ளது. இப்படியாக நமது சரித்திரம், கலை, இலக்கியம் எல்லாம் என்பதுவே நமது காலமாக உள்ளது. இப்படியாக நமது சரித்திரம், கலை, இலக்கியம் எல்லாம் ஒரு திருகின் (Spiral) மேற்கண்ணியென விரிந்த நிலையில் திரம்பவரலாக (Repetition) நிகழ்கிறது.
சமச்சீரற்ற வளைக்கப்பட்ட வெளியையும், சுழற்சியான காலத்தையும் கொண்ட நமது அறிதலில் நேர்க்கோட்டுத் தன்மையானதுமான வளர்ச்சி பற்றிய கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக திணித்தததன் மூலம், ஏகாதிபத்தியங்களின வேட்டைக்காடாக மாற்றப்பட்டு, இன்றுவரை சூரையாடப்பட்டு வரும் வாழ்க்கையாக இருந்து வருகிறது நம் உலகு. இந்த வளர்ச்சியின் வன்முறையை மறுக்கும் நமது இலக்கியங்கள் - வீழ்ச்சியை, நாகரீகத்தை, பகுத்தறிவை இன்னபிற மேற்கத்திய தர்க்கங்களை கிண்டலடிப்பதும், அவற்றின் ஒடுக்குமுறையை வெளிப்படுத்துவதுமாக உருவாகுகின்றன. இங்கு சுயமான நமது நாட்டுப்புறக் கதையாடல் என்பது சுழன்று வந்து, காலத்தின் தேவையாக, நவீன எழுத்து முறையாக உட்காருகிறது. நாம் பல கதைசொல்லிகளையும், பாட்டிகளையும் நவீன மொழிக்குள் உலவவிட்டு பகுத்தறிவின் உச்ச வன்முறையை செயலிழக்கச் செய்கிறோம். பல அற்புதக் கதைகள், புனைவுகள் அவை கட்டமைக்கும் புலன் உறுப்புகள் மூலம் மகிழ்வின் தளம் ஒன்று விரிக்கப்படுகிறது. நமது நினைவுகள் காலத்தில் பின்னோக்கி திருப்பப்படுவதன் மூலம், காலனிக்கு முந்தைய நமது உடலை, புலன்களை கண்டெடுக்கும் செயல் நடைபெறுகிறது. இவ்வாறாக புதைக்கப்பட்ட மூதாதைகளின் பேய்ச்சிரிப்புடன் கிளர்ந்தெழுகிறது மூன்றாம் உலக இலக்கியம் - எல்லா நிர்மாணங்களுக்கும் உலகின் அங்கீகரிக்கப்பட்ட தர்க்க முறைக்கும் எதிராக.
தமிழ்ச்சூழலில் வாசக உள்ளாடைகளை குறிவைத்து நடத்தப்படும் வார, மாத மற்றும் தீபாவளி, பொங்கல் சிறப்பு மலர்கள் உள்ளிட்ட கழிசடை பத்திரிக்கைகளின் மூலம் வெகுசன எழுத்தாக அறியப்பட்டுள்ளவை உருவாக்கி இருக்கும் வாசக - எழுத்தாளர் உறவானது "Seductive Level' -லான ஒரு மகிழ்வு வெளிக்குள் நடைபெற்றுவருவதால், சிறுபத்திரிக்கை வட்டங்களின் உறவானது "Intellectual Level" -லான ஒரு குழுசார் வெளிக்குள் நிகழ்வது தவிர்க்கவியலாததாகிறது. முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு எல்லாம் தற்போக்காகி தலைவிரித்தாடும் நிலை. அங்கீகாரத்தை நோக்கி தங்கள் உணர்வு உறுப்புகளை நீட்டிக்கொண்டு ஆமையாய் நகரும் சிறபத்திரிக்கைச் சிந்தனையாளர்கள்.
(1) - கஹில் - Khahil ..... ArAb News தினசரியில் ஒரு Cartoonist.
- காலக்குறி (ஜனவரி 1996)
குறிப்பு: ஜனவரி 1996-இதழ் காலக்குறி தலையங்கம்.



0 comments:
Post a Comment